

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய,விடிய கன மழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழை நீருடன், சாக்கடை நீர் கலந்து சாலையில் தேங்கி நின்றது. அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். சிறிய மழை பெய்தால் கூட தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. வரும் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.