

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆய்வுக்குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் மோசடி நடந்துள்ளதாகவும், பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இழப்பீடு தொடர்பான ஆவணங்களைச் சரிபார்ப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், அப்துல் குத்தூஸ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்து கழகங்கள், இழப்பீட்டு தொகை டெபாசிட் செய்த விவரத்தை 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயங்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்க வேண்டும். இழப்பீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாவட்டந்தோறும் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு பின்பு, தொடர்பு அதிகாரிகள் மாவட்டங்களில் உள்ள தீர்ப்பாயங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.