39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட 1237 பேர் மனு தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது இன்று பரிசீலனை

தமிழகத்தில் நாடாளுமன்ற - சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட 1237 பேர் மனு தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்தது இன்று பரிசீலனை
Published on

சென்னை,

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதம் 3-ந் தேதி முடிவடைகிறது.

புதிதாக 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக ஏப்ரல் மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்து வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 723 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 628 பேர் ஆண்கள், 93 பேர் பெண்கள், 2 திருநங்கைகள் அடங்குவார்கள். இதேபோல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு 257 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், ஆண்கள் 212 பேரும், பெண்கள் 45 பேரும் அடங்குவார்கள். திருநங்கைகள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், இறுதி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 1237 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 1099 பேரும், பெண்கள் 136 பேரும், திருநங்கைகள் 2 பேரும் அடங்குவார்கள். அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதிக்கு 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசி தொகுதிக்கு 11 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 486 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண்கள் 412 பேரும், பெண்கள் 74 பேரும் அடங்குவார்கள். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதிக்கு 68 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக மானா மதுரை தொகுதியில் 9 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்பட்டு ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும்.

மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் 29-ந் தேதி (நாளை மறுநாள்) மாலை 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com