அமைச்சர் சரத்குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி திமுக மாணவர் அணி போராட்டம் நடத்தியது.
அமைச்சர் சரத்குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்
Published on

சென்னை,

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் சரத்குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின்போது கிரிக்கெட் மைதானத்துக்குள் இருந்தே போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன.

இதனையடுத்து வீடியோ குறித்து அமைச்சர் சரத்குமார் விளக்கம் கொடுத்தார். அதில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் எனது குழந்தைக்கு மாத்திரையை நொருக்கி கொடுத்ததாகவும் விளக்கம் அளித்தார். அமைச்சரின் விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சியான திமுக, போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்தாகக் கூறி, அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியது.

அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. ஆனால், சென்னையில் இன்று நடக்கவிருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தடையை மீறி எழும்பூர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக திமுகவினர் திரண்டனர். தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்திய போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதாக திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் சரத் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சரத்குமார் சேப்பாக்கத்தில் போதை பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் சரண்யா என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com