

சென்னை,
சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த அகமது சித்திக்கிற்கு (வயது 45) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. டிசம்பர் 28-ம் தேதி மறு வீடு செல்லும் சடங்கிற்காக அண்ணா சாலை அருகே உள்ள எல்லீஸ் சாலையில் உள்ள மனைவியின் வீட்டுக்கு சென்றபோது, உறவினர்களுக்கு பரிமாறுவதற்காக ரூ.3,500 மதிப்புடைய ஒரு பக்கெட் மட்டன் பிரியாணியை பெரம்பூரில் உள்ள எஸ்.எஸ்.ஹைதராபாத் கடையில் வாங்கியுள்ளார்.
பரிமாறப்பட்ட அந்த மட்டன் பிரியாணியில் இறந்துபோன பூரான் கிடந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பிரியாணி கடை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், உரிய பதில் அளிக்காததால், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் அகமது சித்திக் புகார் அளித்தார்.
இந்த சம்பவத்தால் குடும்பத்தில் திருமண நிகழ்வை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால், தனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட பிரியாணி கடை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அகமது சித்திக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், டி.ஆர்.சிவக்குமார் அமர்வு பிரியாணி நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய பதிலளிக்காதது சேவைக் குறைபாடு என்பதால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.