

சென்னை,
திருப்பூர் பல்லடத்தில் உள்ள தனியார் பாரில் பீர் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தியதில் மதுபாட்டில்களின் விற்பனை மற்றும் இருப்பு குறித்து சரியான கணக்குகள் இல்லாததும் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில் அதிக விலைக்கு மது விற்றதாக எழுந்த புகாரையடுத்து அந்த தனியார் மதுபான விடுதிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மது வழங்கும் கூடத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் Murugampalayam Health & Recreation Club என்ற பெயரில் 2018-19 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட க்ளப் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால் அதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, மது வழங்கும் கூடத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.