பலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க தற்காலிக தடை - அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

பலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக தடை விதித்து நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டுள்ளார்
பலமுனை கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் சுற்றுலா வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க தற்காலிக தடை - அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதியில் வாகனங்களை நிறுத்த உள்ளூர் திட்ட குழுமம் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறது. இதில் ஏற்பட்ட குழப்பத்தால் வாகன நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் என 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலிக்க பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலித்து அதன் சதவீத அடிப்படையில் பேரூராட்சியும், உள்ளூர் திட்ட குழுமமும் சதவீத அடிப்படையில் பங்கிட்டு கொள்கின்றன.

இதற்காக ஆண்டுதோறும் பேரூராட்சி சார்பில் பொது ஏலம் நடத்தி ஒரே கட்டணமாக வசூலிக்க தனியாருக்கு ஒராண்டு உரிமம் வழங்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டுக்கான பொது ஏலம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி நடத்தப்பட்டது. இதில் வரும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை 7 மாதத்திற்கு சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க அதிக பட்ச தொகையாக ரூ.94 லட்சத்துக்கு 2-வது வார்டு பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் ஏலம் எடுத்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சீபுரத்தில் நடந்த நகராட்சி நிர்வாக மண்டல கூட்டத்தில் கலந்து கொண்ட நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரிடம் மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு ஒரே கட்டணமாக வசூலிக்காமல் விதிகளை மீறி பலமுனை கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலா வரும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள், எனவே கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைத்து, அதனை முறைபடுத்த வேண்டும் என்று திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை விடுத்து இரு அமைச்சர்களிடமும் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு, நுழைவு கட்டண ஏலத்தை நிறுத்தி வைக்கவும், வாகன கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளார். கட்டணம் வசூலிக்க ஏலம் எடுத்த ஏலதாரர் மறு அறிவிப்பு வரும் வரை செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏலதாரர் சீனிவாசன் கடந்த 17-ந்தேதி பொது ஏலம் முடிந்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலரின் வங்கி கணக்கில் அன்று மாலையே ரூ.94 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பேரூராட்சிகளின் சட்ட திட்டப்படி செப்டம்பர் 1-ந்தேதி முதல் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பேரூராட்சிக்கு ஒருபுறம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது ஏல அறிவிப்பின்படி 1-ந்தேதி முதல் நுழைவு கட்டணம் வசூலிக்க தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அல்லது கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து அதன் மூலம் கட்டணம் வசூலிக்க அனுமதி பெற உள்ளதாக ஏலதாரர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com