

கொடைக்கானல் நகர் மற்றும் வில்பட்டி ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் விசாகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வில்பட்டி ஊராட்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அரைக்கும் எந்திரத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து நகர்ப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் குடிநீர் குழாய்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை, கட்டிடங்கள் மற்றும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தங்குவதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அத்துடன் அரசு மருத்துவமனையில் நகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டண முறையில் தண்ணீர் வழங்கும் எந்திரத்தை ஆய்வு கலெக்டர், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அந்த எந்திரம் மூலம் கட்டணம் இல்லமால் குடிநீர் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தநிலையில் கொடைக்கானலில் இருந்து பாம்பார்புரம் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் வரை புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சாலை தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பாம்பார்புரம் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், அந்த சாலையில் மீண்டும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் நாராயணன், ஆர்.டி.ஓ. ராஜா, தாசில்தார் முத்துராமன், அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் பொன்ரதி ஆகியோர் உடன் இருந்தனர்.