

பயணிகள் சேவை குழு ஆய்வு
இந்திய ரெயில்வே வாரிய பயணிகள் சேவை குழு உறுப்பினர் சிவராஜ் கான்டே நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதில் நடைமேடைகள், பயணிகள் ஓய்வறைகள் ஆகியவற்றில் பயணிகளுக்கான இருக்கைகள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டார்.
இதேபோல் டிக்கெட் கவுண்ட்டர், வாகன நிறுத்துமிடம், ரெயில்வே உணவகம் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் ரெயில்வே போலீஸ் நிலையம், ரெயில்வே பாதுகாப்புபடை போலீஸ் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். பின்னர் நடைமேடைக்கு வந்து பயணிகளிடம் குறைகள் கேட்டார்.
அதிகாரிகளுக்கு பரிந்துரை
அப்போது, ரெயில் பெட்டிகளில் உள்ள சில வசதி குறைபாடு குறித்து பயணிகள் தெரிவித்தனர். அதையடுத்து ரெயில் நிலைய வளாகத்துக்கு வந்த சிவராஜ் கான்டே அனுமதியின்றி வாகனங்கள் எதுவும் ரெயில் நிலையம் முன்பு நிறுத்தப்படுகிறதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பயணிகளிடம் அவ்வப்போது குறைகளை கேட்டு அதனை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். ஆய்வின் போது, ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ரெயில்வே வாரிய பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்த நிலையில், தற்போது பயணிகள் சேவை குழு உறுப்பினரும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை ஆய்வு செய்துள்ளார். இது பயணிகளுக்கான வசதியை மேம்படுத்தும் ஆய்வு என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.