தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்:நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மனு கொடுத்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்:நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தல்
Published on

பூரண மதுவிலக்கு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினர். இதில் 286 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் வனிதா ஜெயக்குமார் தலைமையில் கட்சியின் மண்டல செயலாளர் பிரேம்சந்த், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில் 'தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவால் தமிழ்நாட்டில் எண்ணில் அடங்காத குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு சமூக சீரழிவுக்கு வழிவகுக்கிறது. நகரின் முக்கிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மனுவோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் நடத்திய கையெழுத்து இயக்கம் மூலம் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் படிவங்களையும் கொடுத்தனர்.

மலைக்கிராம மக்கள்

அகமலை ஊராட்சியைச் சேர்ந்த 13 மலைக்கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் 'அகமலை கிராமபகுதியில் நாங்கள் நீண்ட காலமாக வசித்து விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில வாரங்களாக தேனி வனக்கோட்ட அலுவலகத்தில் இருந்து இந்த மலைப்பகுதியில் வாழும் மக்களை வெளியேற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. 15 நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று நெருக்கடி கொடுக்கின்றனர். எங்களின் வாழ்வாதாரத்தையும், எங்கள் நிலங்களையும், எங்கள் வாழ்க்கை நிலையையும் கருதி நிரந்தரமாக வாழ வழி செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் மகேந்திரன் கொடுத்த மனுவில் 'தமிழக அரசு அறிவித்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சிறுகுறு தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்' என்று கூறியிருந்தனர். சீப்பாலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகாதேவி கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கொடுக்காவிட்டால் ஊராட்சி குறித்து அவதூறு பரப்புவோம் என்று மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com