

சுதந்திர தின விழா
தெற்கு ரெயில்வே சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா, சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தேசிய கொடி ஏற்றினார். துணை பொது மேலாளர் பி.ஜி.மல்லையா, ரெயில்வே மகளிர் பிரிவு தலைவர் பீனா ஜான் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) முதன்மை கமிஷனர் பீரேந்திரகுமார் தலைமையில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் விழாவில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் பேசியதாவது:-
அளப்பரிய சேவை
கொரோனா காலகட்டத்தில் தெற்கு ரெயில்வே டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் அளப்பரிய சேவையாற்றி உள்ளனர்.பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் தேவையான மருத்துவ உபகரணங்களும், படுக்கை வசதிகளும் தயாராகவே இருக்கின்றன. குழந்தைகள் சிகிச்சைக்காக தனி வார்டும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகம் மற்றும் கேரளா மாநில தேவைகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையாளுகையில் தெற்கு ரெயில்வே 214 சிறப்பு ரெயில்களை இயக்கி இருக்கிறது.
இரட்டை ரெயில் பாதை திட்டம்
அதேபோல 2020-21-ம் ஆண்டில் 7 பகுதிகளில் இரட்டை ரெயில் பாதை திட்டம் முடிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான ஆண்டிப்பட்டி-தேனி பிரிவு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி பிரிவு, தட்டப்பாறை-மிளவிட்டான் பிரிவுகளில் இரட்டை ரெயில் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2020-21-ம் ஆண்டில் 65 ரெயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் முடங்கப்பட்டிருந்த ரெயில் சேவையில் 92 சதவீத ரெயில்கள் மீண்டும் இந்த ஆண்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.