வார்டு மறுவரையறை பணிகள் நிறைவு: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் விரைவில் தேதி அறிவிப்பு

9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடைந்து தயாராக உள்ள நிலையில் அங்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வார்டு மறுவரையறை பணிகள் நிறைவு: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் விரைவில் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இந்த 9 மாவட்டங்களில் மட்டும் வார்டுகள் எல்லை மறுவரையறை செய்வதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தவிடப்பட்டுள்ளது.

எத்தனை வார்டுகள்?

தற்போது வார்டு மறுவரையறை பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,938 ஊராட்சி வார்டுகள், 98 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 11 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டுகள் முறையே 2,679, 154, 16; விழுப்புரத்தில் 5,088, 293, 28; கள்ளக்குறிச்சியில் 3,162, 180, 19; வேலூரில் 2,079, 138, 14;

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டுகள் முறையே 2,200, 127, 13; திருப்பத்தூரில் 1,779, 125, 13; நெல்லையில் 1,731, 122, 12; தென்காசியில் 1,905, 144, 14 என்ற அளவில் வார்டுகள் எண்ணிக்கை உள்ளன.

அந்த வகையில் 9 மாவட்டங்களிலும் மொத்தம் 22 ஆயிரத்து 581 ஊராட்சி வார்டுகள், 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 140 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன.

அதிகாரிகள் ஆலோசனை

எனவே, ஊராட்சி உள்ளாட்சி தேர்தலை அந்த மாவட்டங்களில் நடத்த பூர்வாங்க பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆணைய அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தேர்தலுக்காக பயன்படுத்தப்பட உள்ள வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

அதோடு இந்த 9 மாவட்ட கலெக்டர்களுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த தேர்தலை நடத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலை நடத்துவதற்கான தயார் நிலை அங்கு நிலவுகிறது. எனவே தேர்தல் தேதி அறிவிப்பை அரசியல் கட்சிகள் உள்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

அரசியல் கட்சிகள் ஏற்கனவே இந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் களத்தில் சூடு பறக்கத் தொடங்கிவிடும். சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13-ந் தேதி நிறைவடைய உள்ள நிலையில் உடனடியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com