தேவாவின் பாடல்கள் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்: முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேவாவின் பாடல்கள் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்: முதல்-அமைச்சர் விஜய் இரங்கல்
Published on: 

சென்னை,

பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா இன்று காலமானார். அவருக்கு வயது 76. இன்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

இசையமைப்பாளர் தேவாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com