பெண் போலீசை வழிமறித்து காதல் தொல்லை: கணினி ஆபரேட்டர் கைது

தனக்கு விருப்பம் இல்லை என பெண் போலீஸ் தெரிவித்தும் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
கைது
Published on

பள்ளிப்பட்டு,

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கைகளை கணினியில் பதிவு செய்யும் வேலை செய்து வருகிறார்.

காதல் தொல்லை

இந்நிலையில், பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்தில் கணினி ஆப ரேட்டராக பணிபுரியும் திருத்தணியை சேர்ந்த ராம்குமார் (32) என்பவர். அந்த பெண்ணுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தனக்கு விருப்பம் இல்லை என பெண் போலீஸ் தெரிவித்தும், ராம்குமார் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த பெண் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த ராம்குமார், தனது காரில் அவரை பின்தொடர்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை வழிமறித்து தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது. அவரிடமிருந்து தப்பிய பெண் போலீஸ், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத்திடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

கைது

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் பள்ளிப்பட்டு போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். போலீஸ் துறையில் பணியாற்றிய போது ராம்குமாரின் தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, கருணை அடிப்படையில் ராம்குமாருக்கு கணினி ஆபரேட்டர் பணி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com