

திருவொற்றியூர்,
குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவொற்றியூர் கிழக்கு, மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.தனியரசு, குறிஞ்சி கணேசன், ஆதிகுருசாமி உள்பட ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஆலந்தூர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில், நங்கநல்லூர் சுதந்திர பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் என்.சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட தி.மு.க.வினர் திடீரென நங்கநல்லூர் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பழவந்தாங்கல் போலீசார் சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.
இதேபோல் ஆதம்பாக்கத்தில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தி.மு.க. பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், ஜெபர்தாஸ் பாண்டியன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வடசென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி மற்றும் வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் மருதுகணேஷ் உள்பட தி.மு.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்.கே.பி. நகர் பாலம் அருகே பெரம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர் ஜெயராமன், முருகன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. இது தொடர்பாக எம்.கே.பி. நகரில் உள்ள குடிநீர் வாரிய 4-வது மண்டல பகுதி பொறியாளர் ஏழுமலையிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.
சென்னை வடக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு, தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் மாதவரம் பஜாரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சுதர்சனம் தலைமை தாங்கினார்.
இதில் பகுதி செயலாளர்கள் துக்காராம், பரந்தாமன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பஸ் நிலையம் அருகே மயிலாப்பூர் 173-வது வட்ட தி.மு.க. செயலாளர் பொன்னுசாமி தலைமையில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பெண்கள் கையில் காலி குடங்களுடன் கலந்து கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை விரைந்து தீர்க்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோஷமிட்டனர்.