முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சிலைக்கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
Published on

மதுரை,

நெல்லை மாவட்டத்தில் இருந்த பழமையான சிலைகளை விற்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர்பாட்ஷா கைதானார். இந்த விவகாரத்தில் தன்னை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்தததாக கூறி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, ஐகோர்ட்டில் காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பொன்.மாணிக்கவேல், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதை எதிர்த்து காதர்பாட்ஷா சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரரின் வக்கீல், சி.பி.ஐ. வக்கீல் வாதாடினர். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கு, ஜாமீனில் விடுவிக்கக் கூடிய பிரிவுகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதா? என்பது தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக இன்றைக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி, சிலைக்கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் 4 வாரங்களுக்கு தினந்தோறும் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு நேரில் சென்று கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com