போலீஸ் வாகனங்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டதாக கைதான 27 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

வன்முறையில் ஈடுபட்டதாக கைதான 27 பேருக்கு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் வாகனங்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டதாக கைதான 27 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

சென்னை,

போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டதாக கைதான 27 பேருக்கு சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கலவரம்

ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடைசெய்யவேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தும் விதமாக தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டுவந்தது.

இந்தநிலையில் கடந்த 23ந்தேதி மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. போலீஸ் நிலையங்கள், குடிசைகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

போலீசாரின் வன்முறை

இந்த சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இனியன், ராஜராஜன், தமிழரசன், அருண்குமார் உள்பட 27 பேரை கைது செய்தனர். இந்த 27 பேரில் சுகுமார் என்ற மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நசீர்முகமது முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் போலீஸ்காரர்கள் தான். தேவையில்லாமல் இளைஞர்கள் மீது தடியடி நடத்தினார்கள். பின்னர் வாகனங்களுக்கும், வீடுகளுக்கும் தீ வைத்து வன்முறையை தொடங்கினார்கள். இப்போது ஒவ்வொரு வீடாக சென்று அங்குள்ள அப்பாவி இளைஞர்களை பிடித்து அடித்து உதைத்து, கைது செய்துள்ளனர் என்று வாதிட்டார்கள்.

நிபந்தனை ஜாமீன்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர தலைமை அரசு வக்கீல் வாதிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் மாணவர்கள் கிடையாது. இவர்கள் சமூகவிரோதிகள். போலீசாரின் வாகனங்கள், பஸ்களை தீ வைத்து எரித்துள்ளனர் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நசீர்முகமது, மனுதாரர்கள் 27 பேருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறேன். இவர்கள் அனைவரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இருநபர் ஜாமீனும் வழங்கவேணடும். பின்னர் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைவரும் செங்கல்பட்டில் தங்கியிருந்து, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com