தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com