"கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கை நடத்துங்கள்"; "மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும்" - நீதிபதி கருத்து

கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கை நடத்துங்கள்; மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
"கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கை நடத்துங்கள்"; "மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும்" - நீதிபதி கருத்து
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த, தடயவியல் நிபுணர் சாந்தகுமார் தரப்பில் மாணவியின் மறு உடற்கூறாய்வு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

"இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வுகளுமே வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில், புதிதாக எதுவும் கண்டுபிடக்கப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதனை சரிபார்த்துக் கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, மனுதாரருக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா என்று கேள்வி எழுப்பினார். அப்போது மாணவியின் தந்தை தரப்பில், " உடற்கூறாய்வு அறிக்கை திரிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, " மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் வீடியோப் பதிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்கு பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். உடலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சட்டப்படி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பின்னர் நீதிபதி கூறுகையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர். இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துங்கள்; மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும். கனியாமூர் பள்ளி வன்முறையால் 4,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை: மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com