

திருநெல்வேலி,
நெல்லை மூலைக்கரைப்பட்டியில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மூலைக்கரைப்பட்டிக்கு வரும்போது பஸ்சில் இருந்த 21 வயது இளம்பெண் ஒருவர் திடீரென்று, பஸ் கண்டக்டரை எச்சரிக்கை செய்தார். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது.
மூலைக்கரைப்பட்டியில் பஸ் வந்து நின்றபோது அதில் இருந்து இறங்கிய அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பஸ் கண்டக்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பஸ் கண்டக்டர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்த குமாரசாமி (வயது 59) என்பதும், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரசாமியை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மூலைக்கரைப்பட்டியில் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.