லாரி மீது அரசுப் பேருந்து மோதி நடத்துநர் பலி: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

உயிரிழந்த நடத்துநரின் உடலைக் கைப்பற்றிய மேல்செங்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி மீது அரசுப் பேருந்து மோதி நடத்துநர் பலி: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
அரசுப் பேருந்து
Published on: 

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியில் இன்று நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

லாரி டயர் பஞ்சர்

பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி காய்கறிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து இன்று (வெள்ளிகிழமை) அதிகாலை திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் பகுதியில் உள்ள பெங்களூரு – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில்சென்று கொண்டிருந்தபோது லாரியின் டயர் திடீரென பஞ்சரானது. இதனால் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

விபத்து நடந்தது எப்படி?

இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், சாலையோரத்தில் பழுதாகி நின்றிருந்த லாரியை கவனிக்காமல் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

நடத்துநர் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (வயது 57) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பயணிகள் மீட்பு -சிகிச்சை

மேலும் இந்த பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கம் அரசுஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் விசாரணை

உயிரிழந்த நடத்துநரின் உடலைக் கைப்பற்றிய மேல்செங்கம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X