

சென்னை,
சென்னை கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு பயணிகள் முன்னிலையில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து தற்காலிக நடத்துநர் நித்தியநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவர் ஜெயந்தியின் போது தற்காலிக நடத்துநரின் நண்பருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக, நண்பருக்குப் பதிலாக நடத்துநரைப் பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். படுகாயமடைந்த நடத்துநர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடத்துநர் நித்தியநாதன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.