

சென்னை,
ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்துக்கு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வந்தார். அவருடன் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன், ஜெ.அன்பழகன், சேகர்பாபு, சிவகுமார், மோகன் ஆகியோர் வந்திருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அறையில் ஆலோசனை செய்த அவர்கள், பின்னர் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான கடிதத்தை சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் வழங்கினர்.
உள்நோக்க செயல்பாடு
மேலும், அந்த கடிதத்தின் பிரதியை சபாநாயகரிடமும் வழங்கினர். பின்னர் தலைமைச் செயலகத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- சட்டசபை செயலாளரை சந்தித்ததில் என்ன முக்கியத்துவம் உள்ளது?
பதில்:- கடந்த 18-ந் தேதியன்று நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகர் தனபால் உள்நோக்கத்தோடு நடந்துகொண்ட முறையின் அடிப்படையில், அவர் மீது நம்பிக்கையில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால், தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரக்கூடிய வகையில் ஒரு கடிதத்தை முன்கூட்டியே சட்டசபைச் செயலாளரிடம் கொடுத்து இருக்கிறோம். அதன் பிரதியை சபாநாயகரிடமும் வழங்கி இருக்கிறோம்.
ஜனாதிபதியுடன் சந்திப்பு
கேள்வி:- இன்று 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வறட்சி நிதியாக விவசாயிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டு இருப்பது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன?
பதில்:- அது குறித்த முழு விவரங்களும் வந்தபிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
கேள்வி:- உங்கள் சட்டை கிழிக்கப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க.வினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகிறார்களே?
பதில்:- அதுபற்றி கவர்னரிடம் முறையாக புகார் அளித்து இருக்கிறோம். ஜனாதிபதியையும் சந்தித்து புகார் அளிக்க இருக்கிறோம். இதற்கிடையில், நீதிமன்றத்திலும் முறையிட்டு இருக்கிறோம். எனவே, சட்டப்படி அதை சந்திப்போம்.
ரேஷன் பொருள் நிறுத்தம்
கேள்வி:- ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை, மானியம் நிறுத்தப்பட்டு இருப்பதால், மண்எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட சில பொருட்கள் வழங்குவதையே நிறுத்திவிட்டார்கள் என்று புகார் எழுந்துள்ளதே?
பதில்:- இந்த குற்றச்சாட்டுகளை இப்போது மட்டுமல்ல, அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்தே தெரிவிக்கப் படுகின்றன. முதல்-அமைச்சரும் இப்போது கோட்டையில் தான் இருக்கிறார். எனவே, அவரை சந்தித்து, இந்த கேள்வியை கேட்டு, உரிய விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பேரவை விதி கூறுவது என்ன?
சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவியிலிருந்து நீக்குவதற்காக சட்டசபை விதியின்படி, தனித் தீர்மானம் கொடுக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை கொண்டு வரும் எம்.எல்.ஏ. அதை எழுத்து மூலமாக, தீர்மான வரைவுடன் சட்டசபை செயலாளரிடம் தர வேண்டும். அதன் நகலை சபாநாயகருக்கும் கொடுக்க வேண்டும்.
சட்டசபை கூடுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு இந்தத் தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 14 நாட்கள் முடிந்து கூட்டப்படும் முதல் கூட்ட நாளுக்கான அலுவல் பட்டியலில் இந்தத் தீர்மானம் சேர்க்கப்பட வேண்டும்.
சட்டசபையில் வினா விடை நேரம் முடிந்ததும் உடனடியாக அந்தத் தீர்மானம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சபாநாயகர் அந்த தனித் தீர்மானத்தைப் படித்துக் காட்ட வேண்டும். அதைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கும் எம்.எல்.ஏ.க்களை அவரவர் இடங்களில் எழுந்து நிற்க சபாநாயகர் கேட்டுக் கொள்வார்.
35-க்கு குறையாத எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று ஒப்புதல் அளித்தால், அந்தத் தீர்மானத்துக்கு பேரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக சபாநாயகர் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் அதன் மீதான விவாதத்தை, உடனடியாகவோ அல்லது அந்தத் தீர்மானம் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்களுக்கு உள்ளாகவோ ஒரு நாளில் நடத்த சட்டசபையில் நாள் குறிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.