

கமுதி,
கமுதி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பாலு, அ.தி.மு.க., சார்பில் மண்டலமாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரது தாய் ராணியம்மாள் மண்டலமாணிக்கம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
பாலுவின் தந்தை வீடு, கமுதி கண்ணார்பட்டியில் உள்ளது. இங்கு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தர்மலிங்கத்தின் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.38 லட்சத்து 63 ஆயிரத்து 300, 1,192 வெளிமாநில மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கணக்கில் வராத பணம் குறித்து வருமான வரித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கபட்டது. பறிமுதல் செய்யபட்ட பணம் மற்றும் மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் செல்வமணி தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் ஜெயங்கொண்டம் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 100 பித்தளை காமாட்சி விளக்குகள் மற்றும் சில்வர் தட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் ஜெயசங்கர் என்பதும், உரிய ஆவணமின்றி காமாட்சி விளக்குகள் மற்றும் சில்வர் தட்டுகளை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து காமாட்சி விளக்குகள், சில்வர் தட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.