ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

பொள்ளாச்சி, 

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் போலீசார் மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறையினருக்கு உத்தரவிட்டனர். இந்தநிலையில் சூளேஸ்வரன்பட்டி அமைதி நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அமைதி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, 21 மூட்டைகளில் தலா 50 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த டிரைவர் அஜித் (வயது 23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்க கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com