திருநின்றவூரில் பரபரப்பு: தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரக்கட்டை - ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை

திருநின்றவூரில் ரெயில் தண்டவாளத்தில் தென்னை மரக்கட்டை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநின்றவூரில் பரபரப்பு: தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரக்கட்டை - ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை
Published on

அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக ரெயில் தண்டவாளங்களை தினந்தோறும் ரெயில் எஞ்சின் மூலம் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று அதிகாலையில் ரெயில் என்ஜின் அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது திருநின்றவூர்-நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சுமார் 3 அடி நீளம் உள்ள தென்னை மர கட்டை ஒன்று இருப்பதை என்ஜின் டிரைவர் கண்டுப்பிடித்தார். உடனே சுதாரித்து கொண்டு என்ஜினை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தென்னை மரக்கட்டையை எடுத்து அப்புறப்படுத்தினார்.

பின்னர் இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சென்னை சென்டிரல் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் 10 நாட்களுக்கு முன்பு ரெயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் ஒரு வீட்டை இடித்து அகற்றும் போது அங்கு இருந்த தென்னை மரத்தை துண்டுகளாக வெட்டி குப்பை கழிவுகளோடு சேர்ந்து ரெயில் தண்டவாளத்தின் ஓரமாக கொட்டியது தெரியவந்தது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் யாரேனும் ரெயிலை கவிழ்க்கும் நோக்கில் சதி செய்து தண்டவாளத்தில் தென்னை மரக்கட்டையை வைத்தார்களா? என்ற கோணத்தில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது திருநின்றவூர் ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் மரக்கட்டை கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com