

சென்னை,
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் கனவுகளை நோக்கிய உயர்கல்விப் பயணத்தை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுங்கள். தங்கள் பெற்றோர் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்.
அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி அடையத் தவறிய மாணவர்கள் துவண்டுவிட வேண்டாம். வாழ்க்கை எந்த கதவையும் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம். அதனால், நன்கு படித்து, துணைத் தேர்வுகள் வாயிலாக தேர்ச்சி அடையுங்கள் என உங்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.