‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து வருவதை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
‘அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார். அதனை தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் இல்லங்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்றார்.

அவர்கள் தங்கள் வீட்டிற்கு வந்த முதல்-அமைச்சரை வரவேற்று, அவருக்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்தனர். இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து வருவதை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள். தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார் .

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

முதல்-அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலையில் ஒருவரையொருவர் சந்தித்து பேச முடியாத நிலையை மாற்றி, தமிழக பண்பாட்டையும், மரபையும் மீட்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களையும் முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com