முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் - பிரேமலதா

தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் - பிரேமலதா
Published on

சென்னை,

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சராக பதிவி ஏற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

”தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டனின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com