

சென்னை,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். கடந்த மூன்று போட்டிகளில் சேட்டன் சஞ்சு சாம்சன் நிதானத்துடன் பேட்டிங் செய்ததையும், மிக முக்கியமான நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதும் உற்சாகமாக இருந்தது.
போட்டி முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா அற்புதமான வெற்றியைப் பெறவும், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லவும், உதவிய அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.