விஜய் கட்சியோடு காங்கிரஸ் கூட்டணியா? - கே.எஸ்.அழகிரி விளக்கம்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய்யுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல்காந்தி பேசினார்.
பெரம்பலூர்,
கரூரில் விஜய் மக்கள் பிரசாரத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலால் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கரூரில் நடந்த துயரமான சம்பவத்திற்கு தனது வருத்தத்தையும், இரங்கலையும் பதிவு செய்தார். மேலும், கரூர் பிரசாரம் குறித்தும், அங்கு நடந்த சம்பவம் குறித்தும் விஜய்யிடம் அவர் கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் விஜய்-ராகுல் காந்தி உரையாடல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
“ராகுல் காந்தி தேசிய தலைவர். ராகுல் காந்திக்கு விஜயுடன் நீண்ட காலமாகவே தனிப்பட்ட முறையில் பழக்கம் உள்ளது; அதன் அடிப்படையில் விஜய்யோடு ராகுல் காந்தி பேசியிருப்பார். அதற்காகவெல்லாம் விஜயோடு காங்கிரஸ் கூட்டு சேரும் என சொல்ல முடியாது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுலுக்கு நெருங்கிய நண்பர் என்பதனால் இருதரப்பிலும் ராகுல் பேசினார். எந்த சூழலிலும் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி உடையாது” என்று கூறினார்.






