

சென்னை,
சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், சூரியன் மறைவதில்லை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தை சோனியாகாந்தி வெளியிட மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, மேடையில் இருந்த தலைவர்கள் அனைவருக்கும் வெள்ளி வீரவாள் பரிசளிக்கப்பட்டது. அனைவரும் வீரவாளை தூக்கி பிடித்தபடி ஒன்றாக நின்றபோது, தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
தொடர்ந்து, பொருளாளர் துரைமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதன்பின்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
இங்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கூடியிருக்கிறோம். இந்திய வரலாற்றின் ஒரு அசாதாரணமான தலைவரும், பொது வாழ்க்கையில் 80 ஆண்டுகளையும், 60 ஆண்டுகள் தமிழக அரசியலில் ஆக்கிரமித்து இருந்தவருமான கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக நாம் இங்கு வந்திருக்கிறோம்.
தமிழக மக்களுக்காக பணியாற்றுவதிலும், அரசியலிலும்தான் அவருக்கு ஆர்வம் இருந்தது. மற்றொரு ஆசையும் அவருக்கு அதிகம் இருந்தது. அது தமிழ்மொழி மீது அவர் வைத்திருந்த காதலாகும். அரசியலில் முழு ஈடுபாட்டையும் சக்தியையும் முழு நேரமும் அவர் செலவழித்தார். இலக்கியத்தையும் தமிழ் மொழியை வளர்ப்பதிலும் தனியாக நேரம், சக்தியை உருவாக்கிக் கொண்டார். நல்ல பேச்சாற்றலைக் கொண்டிருந்தாலும், அவரது சக்தி வாய்ந்த பேனாவுக்கு ஈடு எதுவும் இல்லை. சிறந்த எழுத்தாளராக அவர் திகழ்ந்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியதுதான் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தரக்கூடியதாக இருந்தது. தமிழை செம்மொழியாக்கியபோது அவர் எழுதிய கவிதை, தமிழ் மக்களின் நெஞ்சில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
தனது வழிகாட்டியாக ஏற்றிருந்த பெரியார், அண்ணா ஆகியோரின் வழியில் சமூகநீதிக்காக கருணாநிதி பாடுபட்டார். ஆட்சியில் இருந்தபோது அதற்கான சட்டங்களை கொண்டு வந்தார். திருமணச் சட்டத்தில் செய்த சீர்திருத்தம், மகளிருக்கான சொத்துரிமை சட்டத்தில் அவர் கொண்டு வந்த திருத்தம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்த இடஒதுக்கீடு, நிலச்சீர்திருத்தச் சட்டத்தில் கொண்டு வந்த மாற்றம், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, பிராமணர் அல்லாதோர் கூட ஆலயங்களில் அர்ச்சகராக இருக்கலாம் என்று கொண்டு வந்த சட்டம் போன்றவை சில உதாரணங்களாகும். கூட்டாட்சி தத்துவத்தில் மாநிலங்களின் உரிமைக்காக இறுதிவரை போராடிய போராளி அவர்.
மிகப் பெரிய ஜனநாயகவாதியாக திகழ்ந்த கருணாநிதி, பாராளுமன்ற நிறுவனங்களிலும், மரபுகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்தார். மதச்சார்பற்ற அரசியல்வாதியாக இருந்ததோடு, அனைத்து மதத்தினரையும் மதித்தார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு அரணாக விளங்கினார். ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை உருவாக்கித் தருவதில் முனைப்பாக இருந்தார்.
காங்கிரஸ் கட்சி அவரை மறக்க முடியாது. 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வங்கிகளை தேசியமயமாக்கும்போது, மன்னர் மானிய ஒழிப்பின்போது, நிலச்சீர்திருத்த சட்டங்களை அமல்படுத்தியபோது இந்திராகாந்திக்கு கருணாநிதி தந்த மகத்தான ஆதரவை மறக்க முடியாது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அவர் தந்த ஆதரவை காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் மறக்க மாட்டோம். தேசிய அரசியலில் எப்போதெல்லாம் சிக்கல்கள் வந்ததோ, அப்போதெல்லாம் நல்ல அறிவும் நீண்ட அனுபவமும் கொண்ட கருணாநிதியிடம் ஆலோசனை கேட்ட சம்பவங்களையெல்லாம் தனிப்பட்ட முறையில் எனது இதயத்தில் தாங்கி நிற்கிறேன்.
கருணாநிதி வாழ்ந்திருந்தபோது எப்படி நமது கட்சிகள் ஒன்றாக இருந்ததோ, அதேபோல் தேசிய அரசியலில் அரசியல் சாசனத்தையும், அதற்கான நிறுவனங்களையும் சீரழிப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தும் போதும் இந்த இரண்டு கட்சிகளும் உறுதியாக இணக்கமாக நின்று போராட வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
இங்கு தோளோடு தோளாக நின்று கருணாநிதியின் நினைவை போற்றும் நாம், இந்த நேரத்தில் தமிழகம் மற்றும் இந்திய மக்களுக்கு ஒரு தகவலை கொண்டு சேர்க்க வேண்டும். 70 ஆண்டுகளாக நாம் உருவாக்கி வைத்துள்ள இந்தியாவையும், ஜனநாயக நிறுவனங்களையும், அரசியல் சாசனத்தையும் நாம் இரண்டு பேரும் இணக்கமாக உறுதியாக இருந்து பாதுகாக்க போராடுவோம் என்பதுதான் நாம் எடுக்கும் உறுதிமொழியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-
ஒரு மிகப் பெரும் தமிழினத் தலைவர் கருணாநிதியின் நினைவைப் போற்றுவதற்காக இங்கே கூடியிருக்கிறோம். அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி கிடையாது. அவர் தமிழ் மக்களின் குரலாக ஒலித்தார்.
கருணாநிதியை சந்தித்தவர்கள், தமிழ் மக்களுக்காகவே அவர் தன்னை அர்ப்பணித்து வாழ்கிறார் என்பதை புரிந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் கருணாநிதியை சில - பல விஷயங்களில் ஞாபகப்படுத்திப் பார்க்கிறோம். அவரை இரண்டாவதாக சந்தித்த நினைவை நான் வைத்திருக்கிறேன். கருணாநிதியின் வீட்டுக்கு அதற்கு முன்பு நான் சென்றதில்லை. முதன்முறையாக அவரது வீட்டுக்குச் செல்லும்போது அது மிகப் பெரிய வீடாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். பல்வேறு அம்சங்கள் உள்ளே இருக்கும் என்று நினைத்தேன்.
பல ஆண்டுகளாக தலைவராக இருக்கும் அவரது வீடு மிகப் பெரியதாக இருக்கும் என்ற கற்பனையில் சென்றேன். ஆனால் வீட்டுக்குள் சென்றபோது, எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றைத்தான் பார்த்தேன். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, பலமுறை முதல்- அமைச்சராகவும் இருந்த ஒரு தலைவரைப் பார்க்கும்போது, அவரிடம் கண்ட எளிமை, தூய்மை, அகந்தையின்மை ஆகியவற்றை ஒரு இளம் அரசியல்வாதியாக உணர்ந்தேன். அதை பார்க்கும்போது தமிழகம் மற்றும் இந்திய மக்கள் நிச்சயம் பெருமைப்பட வேண்டும். கருணாநிதியின் தன்மைகளை இளம் அரசியல்வாதியாக நான் கண்டபோது, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை அது உணர்த்தியது. அரசியலில் ஒருபடி மேலே செல்வதற்கு வழிகாட்டியாக இருந்தமைக்காக அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
மக்களின் குரல்களைக் கேட்டு உதவி செய்தவர் கருணாநிதி. அரசு நிறுவனங்களை செம்மைப்படுத்தியவர் அவர். ஆனால் தற்போது நமக்கொரு அரசு இருக்கிறது. அது தமிழக மக்களின் குரல், கலாசாரம், தமிழக நிறுவனங்கள் மற்றும் நாட்டின் அமைப்புகளை ஒடுக்குவதாக உள்ளது. ஒரே யோசனைதான் இந்தியாவை ஆள வேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஆள்கின்றனர். இந்த நாட்டில் உள்ள லட்சக் கணக்கான மக்களின் குரல் பற்றி அவர்கள் நினைப்பதில்லை. பல்வேறு மொழிகள், கலாசாரத்தை மதிக்கும் அரசாக இந்த அரசு இல்லை.
நமது கலாசாரம், பண்பாடு ஆகியவை மதிக்கப்பட வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை அடுத்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டை அழிக்கும் முயற்சியை ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு, இந்திய தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி ஆகிய சுயாட்சி அமைப்புகள் அழிவதை நாம் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம்.
தமிழக மக்களின் குரலாக இருந்தமைக்காக கருணாநிதிக்கு நன்றி சொல்லி முடிக்க விரும்புகிறேன். இந்த உலகத்தை எப்படி நோக்க வேண்டும் என்பதற்கான வழியை காட்டியதற்கும், இந்தியாவை பலப்படுத்துவதற்கான யோசனைக்காகவும் நன்றி சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறினார். கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், தயாநிதிமாறன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், துர்கா ஸ்டாலின், கவிஞர் கனிமொழி எம்.பி., செல்வி, மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி, மோகனா, அரவிந்தன், செந்தாமரை, முரசொலி செல்வம், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், இயக்குனர் அமிர்தம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மோகன், ஏ.ஆர்.லட்சுமணன், ராமசாமி, ஞானப்பிரகாசம், சிவசுப்பிரமணியம், எஸ்.கே.கிருஷ்ணன், பாஸ்கரன், சாமிதுரை, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பேராயர் எஸ்றா சற்குணம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. மகளிரணி புரவலர் இந்திரகுமாரி, தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நடிகைகள் குஷ்பு, குட்டி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.