

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு வருகிற 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஆனால் காங்கிரஸ் தரப்பில் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பட்டியல் எப்போது அறிவிக்கப்படும்? என கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக வேட்பாளர் தேர்வு பற்றிய கலந்தாலோசனைகள் நடை பெற்றன. இந்நிலையில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று இரவு 8.30 மணி அளவில் தொடங்கியது.
கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் ராகுல் காந்தி ஆகியோரது தலைமையில் சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை குழு தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட ஐவர் குழு உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் 28 காங்கிரஸ் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பரிசீலனை நடைபெற்றது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, 85 சதவீத வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 15 சதவீத தேர்வுக்காக பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும்' தெரிவித்தார். இறுதி செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், இன்றைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், காங்கிரசில் மேலூர் உள்ளிட்ட 3 தொகுதிகளின் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. 3 வேட்பாளர்களின் பெயர்களை தேர்வு செய்து காங்கிரஸ் தலைவரின் முடிவிற்காக பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை காங்கிரஸ் தலைவர் இன்னும் சற்று நேரத்தில் இறுதி செய்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.