

சென்னை,
தமிழக சட்டசபையில் நீட் தேர்வு பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்) நேற்று பேசினார். அப்போது அவர் கூறிய சில வார்த்தைகளை சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்த்தனர்.
அந்த வார்த்தைகளை நீக்கும்படி சபாநாயகரின் இருக்கைக்கு முன்பு வந்து அவர்கள் வாதிட்டனர். அவர்களை இருக்கைக்கு திரும்பும்படி சபாநாயகர் ப.தனபால் பலமுறை எச்சரித்தார். ஆனால் அங்கிருந்து செல்ல அவர்கள் மறுத்ததால் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்ற அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ராமசாமி உள்பட அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் இதுபற்றி எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர், அவையை விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளியேற்றிய தீர்ப்பு இன்று மட்டுமே பொருந்தும் என்று கூறி நாளைக்கு அவைக்கு அவர்கள் வர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால், இன்று மட்டுமே அவர்கள் வர முடியாது. நாளைக்கு (இன்று) அவர்கள் அவைக்கு வரலாம் என்று கூறினார்.