கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் -கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

கவர்னரை கண்டித்து சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் -கே.எஸ்.அழகிரி பங்கேற்பு
Published on

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். திரவியம், ரஞ்சன்குமார், முத்தழகன், சிவராஜசேகரன், டெல்லிபாபு உள்பட மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், ஆர்.டி.ஐ. பிரிவு துணைத்தலைவர் மயிலை தரணி, கலைப்பிரிவு செயலாளர் சூளை ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் அகமது அலி உள்பட மாநில-மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதா?

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆர்.என்.ரவி கவர்னராக தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். அவரும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்கிறார். அவருக்கும், நமக்கும் சித்தாந்தம்தான் குறுக்கே இருக்கிறது. சனாதனம் என்ற பெயரில் பழமைவாதத்தை மீண்டும் திணிக்க பார்க்கிறார்கள்.

ஒற்றுமையான இந்தியாவை பாழ்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழ் தெரியாது. பின்பு எப்படி தமிழகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் புரியும்?. தமிழ்நாடு என்றால் தனி நாடு என்ற பொருளில் புரிந்துவிட்டு, பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஜவகர்லால் நேருவும், காங்கிரஸ் கட்சியும் அணுஅணுவாய் சேர்த்து கட்டமைத்த தேசம் இது.

பின்வாங்கினாலும் விடமாட்டோம்

அரசின் பிரதிநிதி என்பதை மறந்து விட்டு, கட்சியின் பிரதிநிதி போல கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட கூடாது?. எங்கு போனாலும் சனாதனத்தை முன்னிறுத்தும் கருத்துகளையே அவர் பேசி வருகிறார். கவர்னர் ஒரு அறிக்கையை விடுத்து சற்று பதுங்கி இருக்கிறார்.

இதற்காக நாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். கவர்னரின் வன்முறை பேச்சு, சட்ட வரையறைகளை மீறிய நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுக்கும்.

கவர்னர் ஆர்.என்.ரவி போன்ற மதவாதிகளை அப்புறப்படுத்தாமல் நாங்கள் ஓய மாட்டோம், விட மாட்டோம். வன்முறை போராட்டங்களை கொள்கை ரீதியான போராட்டங்கள் வெல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com