குளச்சலில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி காங்கிரசார் ஏர் கலப்பை பேரணி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய கோரி குளச்சலில் காங்கிரசார் ஏர் கலப்பை பேரணியில் ஈடுபட்டனர்.
குளச்சலில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி காங்கிரசார் ஏர் கலப்பை பேரணி
Published on

குளச்சல்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குளச்சலில் பஸ் நிலையம் முன்பில் இருந்து அண்ணாதிடல் வரை ஏர்கலப்பை பேரணி நடைபெறும் என காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை எனத்தெரிகிறது.

ஆனால், திட்டமிட்டப்படி நேற்று மாலை ஆண்கள், பெண்கள் என ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் குளச்சல் பஸ் நிலையம் முன்பு காமராஜர் சிலை அருகே குவிய தொடங்கினர். ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. மேலும், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேரணிக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் சந்திரசேகர், வட்டார தலைவர்கள் கிளாட்சன், ஜெரால்டு கென்னடி, டென்னீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் பங்குத்தந்தை மரிய செல்வன் வாழ்த்தி பேசினார்.

பேரணியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி, மனித உரிமை துறை மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் சேகர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் ஜார்ஜ், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திரதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி காமராஜர் சிலை முன்பில் இருந்து தொடங்கி அண்ணாதிடல் நோக்கி புறப்பட்டது. மார்க்கெட் சாலையில் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அனுமதியின்றி பேரணி செல்லக் கூடாது எனக்கூறி பரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். உடனே, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி உள்பட 355 பேரை கைது செய்து அருகில் இருந்த மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர்கள் கே.டி.உதயம், மகேஷ் லாசர், முனாப், செயலாளர் தர்மராஜ், தக்கலை யூனியன் தலைவர் அருள் ஆன்றனி, குருந்தன்கோடு யூனியன் துணைத்தலைவர் எனல்ராஜ், மீனவர் காங்கிரஸ் தேசிய செயலாளர் சபீன், இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குளச்சல் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் புஷ்பதாஸ், நகர எஸ்.டி.பி.ஐ. தலைவர் நிசார், ஜலாலுதீன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. செல்லகுமார் நேற்று குமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். அவர் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் பகுதிக்கு விரைந்தார். அங்கு காங்கிரசார் கைது செய்யப்பட்டு தங்கவைக்கப்பட்டு இருந்த மண்டபத்துக்கு சென்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com