

சென்னை,
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனுக்கு கடந்த நவம்பர் 11-ந்தேதி கிரீஸ் நாட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் மாறன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதை தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) சென்னையில் மணமக்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் காவியா மாறன்-அனிருத் ரவிச்சந்தர் தம்பதிக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“அன்புள்ள கலாநிதி மாறன் அவர்களுக்கு, உங்கள் அன்பு மகள் காவியாவின் திருமணத்திற்கு என்னை நேரில் அழைத்ததற்காக உங்களுக்கும், உங்கள் மனைவி காவேரிக்கும் நன்றி. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த மங்களகரமான நிகழ்விற்காக மகிழ்ச்சியுடன் தயாராகி வருகிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வணக்கத்திற்குரிய கலைஞர் கருணாநிதியின் ஆசீர்வாதங்களுடன், இந்த கொண்டாட்டங்கள் சந்தேகமின்றி அருளும், அழகும் நிறைந்ததாக இருக்கும்.
தயவுசெய்து எனது ஆசீர்வாதங்களைத் தெரிவியுங்கள். காவியா-அனிருத் தம்பதியினர் ஒருவருக்கொருவர் பலம், நட்பு மற்றும் அன்பை வழங்கி, தங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.