காங்கிரசார் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் காங்கிரசார் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரசார் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
Published on

களக்காடு:

பிரதமர் மோடி பற்றிய அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, களக்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கருப்புச்சட்டை அணிந்து மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் நடைபயணத்தால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி எழுச்சி அடைந்துள்ளது. இதனை பொறுக்க முடியாமல் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அதானி குழும மோசடி குறித்து ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்ய பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டது போன்று மத்திய பா.ஜ.க. அரசும் தற்போது கையாள்கிறது.

ராகுல்காந்தி மீதான நடவடிக்கையால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். ராகுல்காந்தி பதவிக்கு ஆசைப்பட்டவர் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியையே தூக்கி எறிந்தவர். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு நியமித்த கவர்னர் ரவி தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, ராஜா நாராயணன், களக்காடு நகர தலைவர் ஜார்ஜ் வில்சன், ராஜா, வசந்தா உள்பட திரளானவர்கள் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com