விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்து படுதோல்வியை சந்தித்தார். இதனால் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்: பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார் தே.மு.தி.க. தொண்டர்கள் அதிர்ச்சி
Published on

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக திகழ்ந்தது. ஏனெனில் இங்கு அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் களம் கண்டார்.

ஏற்கனவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி தொடங்கிய உடன், முதன் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு தான் சட்டசபைக்குள் நுழைந்தார். அதன் அடிப்படையில், முதன் முறையாக தேர்தலில் களம் கண்ட பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலத்தை தேர்வு செய்து போட்டியிட்டார்.

29 பேர் போட்டி

இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் கார்த்திகேயன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன், மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐ.ஜே.கே. பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா மற்றும் இதர கட்சிகள், சுயேச்சைகள் 24 பேர் என மொத்தம் 29 பேர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

26 சுற்றுகளிலும் பின்தங்கிய தே.மு.தி.க.

கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிலேயே இல்லாமல் போனது, அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை அளித்தது.

அதோடு, 26 சுற்றுகள் வரைக்கும் நடந்த வாக்கு எண்ணிக்கையில் எந்த சுற்றிலும் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., காங்கிரஸ் வேட்பாளர்களை விட கூடுதல் வாக்குகளை பிரேமலதா விஜயகாந்த் பெறவில்லை. கணிசமான அளவிலேயே வாக்குகளை பெற்று வந்தார்.

காங்கிரஸ்-பா.ம.க. இடையே போட்டி

இதன் மூலம் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இறுதி வரை காங்கிரஸ், பா.ம.க. வேட்பாளர்கள் இடையே தான் கடுமையான போட்டி நிலவியது. இருவரும் இறுதி வரை ஒருவரையொருவர் முந்தி சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் யார் வெற்றி பெறப் போகிறார் என்பதில் பெரும் பரபரப்பு நிலவியது இறுதியாக இத்தொகுதி காங்கிரசின் வசம் சென்றது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 77,064 (தபால் ஓட்டுகள் சேர்த்து) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கார்த்திகேயனை விட 862 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

டெபாசிட் இழந்தார்

இதற்கிடையே பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் வாங்குவதற்கு 32 ஆயிரத்து 662 வாக்குகள் பெற்று இருக்க வேண்டும். ஆனால், அவர் 25 ஆயிரத்து 908 மட்டுமே பெற்றதால், அவர் டெபாசிட் கூட பெற முடியாமல் போனது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள்

ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்) - 77,064

கார்த்திகேயன் (பா.ம.க.) -76,202

பிரேமலதா விஜயகாந்த் (தே.மு.தி.க.) -25,908

பார்த்தசாரதி (ஐ.ஜே.கே.)- 841

அமுதா (நாம் தமிழர் கட்சி) -8,642

நோட்டா- 761

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com