ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் - குமரிஅனந்தன் உள்பட 200 பேர் கைது

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். குமரிஅனந்தன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் - குமரிஅனந்தன் உள்பட 200 பேர் கைது
Published on

சென்னை,

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்திபவனில் இருந்து அண்ணாசாலை வரையில் கண்டன ஊர்வலம் நடத்துவதற்கு காங்கிரசார் நேற்று திட்டமிட்டனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். மேலும் சத்தியமூர்த்திபவன் நுழைவுவாயில் முன்பு தடுப்புகளை அமைத்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

எனவே ப.சிதம்பரம் கைதை கண்டித்து சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் தலைமையில் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் தணிக்காச்சலம், எஸ்.சி. பிரிவு மாநில அமைப்பாளர் பி.வி.தமிழ்செல்வன், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் அகமது அலி உள்பட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், மத்திய அரசை கண்டித்தும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ப.சிதம்பரத்தை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பின்னர் தடையை மீறி அண்ணாசாலை நோக்கி ஊர்வலம் செல்ல காங்கிரசார் முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது சிலர் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தகர்த்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

குமரிஅனந்தன் உள்பட நிர்வாகிகள் தாங்களாகவே கைதானார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அமீர் மஹால் அருகே உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே தமிழ்நாடு இளைஞர் காங்கிரசார் 20 பேர் தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் வேளச்சேரி பகுதி தலைவர் மாங்கா சேகர் தலைமையில், தென்சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சாந்தி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்னேஷ்வரன் முன்னிலையில் சென்னை அடையாறில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் கலந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com