‘நதிகளை இணைப்பதால் நாடு வளம் பெறும்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

‘நதிகளை இணைப்பதன் மூலம் கலாசாரம், பொருளாதாரம் மேம்படுவதுடன் நாடும் வளம் பெறும்’ என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
‘நதிகளை இணைப்பதால் நாடு வளம் பெறும்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
Published on

சென்னை,

தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் நல சங்கம் சார்பில் கே.எல்.கண்ணன் எழுதிய காவிரி ஆற்றின் போராட்டங்களும் தாக்குதல்களும் என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.

விழாவில் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

காவிரி தொடர்பான இந்த நூல் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகள் மற்றும் காவிரி தீர்ப்பு விவரம் குறித்து முழுமையான விவரங்களுடன் எழுதப்பட்டுள்ளது.

காவிரி ஆறும், தமிழகமும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. காவிரியின் பெருமை சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை, பெரிய புராணம் போன்ற சங்ககால நூல்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 20-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நூலிலும் காவிரியின் பெருமைகள் எடுத்துக் கூறப்பட்டு உள்ளது.

காவிரி ஆற்றங்கரையில் புகழ் மிக்க கோவில்கள் உள்ளன. குறிப்பாக திருச்சியில் ஸ்ரீரங்கம் கோவில், தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோவில் முக்கியமானவையாகும். காவிரி ஆறு ஒரு மாநிலத்தில் மட்டும் பாயாமல், பல மாநிலங்களில் பாய்ந்து வளத்தை வழங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி பிரச்சினையில் தீர்வு காணப்பட்டு உள்ளது.

நதிகள் இணைப்பு என்பது காலத்தின் கட்டாயமாகும். இதுதொடர்பாக மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளேன். நதிகள் இணைப்பு குறித்து மத்திய மந்திரி நிதின்காரியிடமும் பேசி உள்ளேன். நதிகளை இணைப்பதன் மூலம் கலாசாரம், பொருளாதாரம் மேம்படுவதுடன் நாடும் வளம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com