சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்அடுத்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில்அடுத்த மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம்
Published on

கோட்டை மாரியம்மன் கோவில்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத கோவில்களில் தற்போது திருப்பணிகள் நடத்தப்படுகிறது. அதன்படி 400 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு பிறகு திட்டநாஞ்சேரியில் தேரோட்டம் நடத்தப்பட்டது.

850 ஆண்டுகள் பழமை வாய்ந்த சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. பல ஆண்டுகள் திருப்பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது ரூ.4 கோடியே 35 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி 90 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.

அடுத்த மாதம் கும்பாபிஷேகம்

தொடர்ந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கோவில் தேர் ரூ.4 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்தன்று தேரோட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் இதுவரை 1 லட்சம் ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தர்மபுரியில் 1 லட்சத்து 51 ஆயிரம் ஏக்கர் நிலம் அளவீடு செய்து கல் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

38 பேருக்கு அர்ச்சகர் பணி

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை ரூ.5 ஆயிரத்து 213 கோடி மதிப்பில் அறநிலைய துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 1,044 கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 38 அர்ச்சகர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 3 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளன. சென்றாயபெருமாள், குமரகிரி முருகன் கோவில்கள் திருப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வில் கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா உள்ப்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com