2,287 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டத்தில் 2,287 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
2,287 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
Published on

கோவை

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டத்தில் 2,287 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவையில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் ராஜவீதி தேர்நிலைத்திடலில் 12 அடி உயரத்தில் ராஜவிநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு ராஜவிநாயகர் கம்பீரத்துடன் இருப்பதுபோன்ற விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு தர்மராஜா அருள் பீடத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் பூஜை செய்தார். தொடர்ந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில செயலாளர் டி.சி.செந்தில்குமார், மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, மேற்கு மண்டல தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

இந்து முன்னணி

பாரத்சேனா சார்பில் சிவானந்தா காலனியில் 13 அடி உயரத்தில் வெற்றி விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இதில் மாநில தலைவர் செந்தில்கண்ணன், பிரவீன்குமார், தாமு, குமரேசன், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த 13 அடி உயர வெற்றி விநாயகரை வழிபாடு செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதுபோன்று இந்து முன்னணி சார்பில் ரத்தினபுரி சாஸ்திரி சாலையில் 9 அடி உயரத்தில் சுவர்ண விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலையில் ரூ.3 லட்சத்தில் 500 ரூபாய் நோட்டுகளால் சுவர்ண அலங்காரம் செய்யப்பட்டது. இதில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2,287 சிலைகள்

இதுதவிர பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கோவை மாநகர பகுதியில் மட்டும் மொத்தம் 676 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. முன்னதாக சிலைகள் வைத்ததும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்கள் வந்து வழிபட்டனர்.

அத்துடன் அந்தந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் சிலைகளை கண்காணித்து வருகிறார்கள். மேலும் புறநகர் பகுதியில் 1,611 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மொத்தத்தில் கோவை மாவட்டத்தில் 2,287 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இந்த சிலைகள் நாளை (புதன்கிழமை) மற்றும் 22-ந் தேதி விஜர்சனம் (சிலை கரைப்பு) செய்யப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு

அதன்படி கோவை மாநகர் பகுதியில் 20-ந் தேதி சிங்காநல்லூர், குறிச்சி, குனியமுத்தூர், வெள்ளலூர் ஆகிய குளங்களில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது. 22-ந் தேதி முத்தணங்குளத்தில் கரைக்கப்படுகிறது. இதற்கான அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை போலீசார் செய்து வருகிறார்கள்.

மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள அனைத்து விநாயகர் சிலைகள் உள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக மாநகர பகுதியில் 2 ஆயிரம் போலீசாரும், புறநகர் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் என்று மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சூலூர்

கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இந்து அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 58 இடங்களில் சிலைகளும், இதேபோல் சூலூரில் 95 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவையொட்டி சிறுவர் சிறுமியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com