தொடர் தோல்வி: அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் - அன்புமணி

அதிமுக 2 தொகுதிகளிலும் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தொடர் தோல்வி: அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் - அன்புமணி
Published on: 

சென்னை,

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால், அக்கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சுயபரிசோதனை

மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டப்பேரவையில் தவெக-வின் பலம் அதிகரித்துள்ளது. நீண்ட காலத்துக்குப் பிறகு ஓட்டுக்கு பணம் ஏதும் கொடுக்காமல் ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளிலும் 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர் தோல்வியடைந்து வரும் அதிமுக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதிமுகவின் மீது இருக்கும் நல்ல எண்ணத்தில் தான் இதை சொல்கிறேன் என்றார்.

குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்தது

தமிழகத்தில் கடந்த காலங்களில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வந்த குறுவை சாகுபடி, இந்த முறை 1.5 லட்சம் ஏக்கருக்கும் குறைவான பரப்பளவில் நடைபெற்றுள்ளது. கர்நாடக அரசு உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததே சாகுபடி பரப்பளவு குறைந்ததற்கு காரணம்.

மேலும், எல் நினோ தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com