

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை வருகிற 19-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சனி,ஞாயிறு விடுமுறை அதனை தொடர்ந்து 20-ந் தேதி வரை விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்தனர்.
இதனால் சென்னை எழும்பூர் , தாம்பரம், செண்டிரல் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல, கிளாம்பக்கம் பேருந்து நிலைத்திலும் பயணிகள் சாரை சாரையாக படையெடுத்தனர். சென்னை மட்டுமின்றி, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளின் கூட்டத்தை சிறப்பு பஸ்களையும் தமிழக அரசு இயக்கியது.
மேற்குவங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே இந்த பண்டிகையில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்னோர் ரெயில்கள் மூலம் புறப்பட்டு செல்கின்றனர். இதற்காக கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை ரெயில் நிலையத்தில் இன்று மதியம் முதல் ஏராளமான பயணிகள் குவிந்தனர். இவர்கள் ரெயிலில் இடம் பிடிக்க ஒரே நேரத்தில் ரெயிலில் ஏற முயன்றதால் கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கோவை காந்திபுரத்தில் உள்ள திருவள்ளுவர் பஸ் நிலையம், உக்கடம் பஸ் நிலையம், சிங்காநல்லூர் பஸ் நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திருச்சி, தென்காசி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 120 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இருப்பினும் கூட்டம் அலைமோதியது. இதையடுத்த கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.