

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தொகுதி மறுவரையறை குறித்து மக்களிடையே பீதியை உண்டாக்கிய திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்!
தொகுதி மறுவரையறையினால் தமிழக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-இல் இருந்து 59-ஆக உயரும் என மக்களவையில் உரையாற்றிய நமது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டுமொருமுறை உறுதிப்படத் தெரிவித்து, திசைதிருப்பு கும்பல்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு முன் கோவை மண்ணில் வைத்தே நமது உள்துறை மந்திரி தமிழக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூட குறையாது என்று தெளிவாக எடுத்துக்கூறியபோதும், அதனை ஏற்றுக்கொள்ளாது, இத்தனை நாட்களாகப் போலி நாடகங்களை அரங்கேற்றி மக்களைத் திசைதிருப்ப முயற்சித்த திமுகவினர் இன்றாவது அரசியல் காழ்ப்புணர்ச்சியை விடுத்து, உண்மையை உணர்ந்து கொண்டிருப்பர் என்று நம்புகிறேன்.
தொகுதி மறுவரையறையினால் மக்களவையில் தமிழகத்திற்கு எந்த நஷ்டமும் இல்லையென்ற உண்மையைத் தங்கள் காதார கேட்ட பின்பும், தோல்வி பயத்தில் பிதற்றுவதைத் திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்! மேலும் இத்தனை நாட்களாகத் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தித் தமிழக மக்களிடையே பயத்தை உண்டாக்கியதற்குத் தார்மீக ரீதியாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.