

சென்னை,
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது.
இந்த மசோதாக்கள் நாளை (வியாழக்கிழமை) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து உள்ளனர்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விவாதத்தில் பேச வேண்டிய எம்.பி.க்கள் தயாராக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.