ராமேசுவரத்தில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி 50 சதவீதம் நிறைவு

ஆஞ்சநேயர் சிலையின் பாதத்தில் இருந்து இடுப்பு வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
ராமேசுவரம்,
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் விளங்குகிறது. அதுபோல் ராமேசுவரம் தலத்துடன் ஆஞ்சநேயருக்கு முக்கிய தொடர்பு உள்ளது. எனவே ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் ஒரு அமைப்பு சார்பில் சுமார் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
தற்போது வரை 50 சதவீத பணி முடிவடைந்து உள்ளது. உயரமான பீடம் அமைக்கப்பட்டு அதில் ஆஞ்சநேயர் நிற்பது போன்று சிலை அமைக்கப்படுகிறது. சிலையின் பாதத்தில் இருந்து இடுப்பு வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதற்கான கட்டுமான என்ஜினீயர் ஸ்ரீதர் கூறும்போது, "இந்தியாவில் 4 இடங்களில் தலா 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிம்லா மற்றும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆஞ்சநேயர் சிலைகளுக்கான பணிகள் முடிந்து திறக்கப்பட்டுவிட்டன. தற்போது ராமேசுவரத்தில் 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி இன்னும் 6 மாதத்தில் முழுமையாக முடிவடைந்து, திறப்பு விழாவுக்கு சிலை தயாராகிவிடும். கடல் உப்புக்காற்றால் சிலை சேதம் அடையாமல் இருக்க பிரத்தியேக ரசாயன பொருட்களை கலந்து இச்சிலை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த பின்னர் அடுத்ததாக அசாமில் இதே போல் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






