

சென்னை,
சென்னை ரெயில்வே கோட்டத்தில் 16 சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே லெவல் கிராசிங் கேட்டுகளில் நடக்கும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் கடந்த 2025-26 நிதியாண்டில், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 11 ரெயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டு, அங்கு சுரங்கப்பாதைகள் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டன.
நடப்பு நிதியாண்டில் (2026-27) செப்டம்பர் மாதம் வரை மேலும் 5 ரெயில்வே கேட்டுகள் நீக்கப்பட்டு சுரங்கப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தம் 16 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைகள் ஒவ்வொன்றும் தலா சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இதேபோல, அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் திருமணி-லத்தேரி சாலை, சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் நிலையங்களுக்கு இடையே அதிகத்தூரிலும், அதே வழித்தடத்தில் திருவாலங்காடு மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கு இடையே மோசூர் சாலையிலும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.