புது வண்ணாரப்பேட்டையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ரூ.71.90 கோடி மதிப்பீட்டில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புது வண்ணாரப்பேட்டையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணி: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
Published on

சென்னை,

புது வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் அனைத்து வசதிகளுடன் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், திருவொற்றியூர் நெடுஞ்சாலை செல்லும் பகுதியில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதல் டோல்கேட் மெட்ரோ நிலையம் வரை மற்றும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு என மொத்தம் 2,400 மீட்டர் நீளத்தில், ரூபாய் 71.90 கோடி மதிப்பீட்டில், அனைத்து வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இன்று (01.06.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்தப் பணிகளுக்காக சாலையில் மின் கேபிள்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், இணையதள வசதிகளான நெட்வர்க் கேபிள்கள் உள்ளிட்டவற்றை தரையின் கீழ் கொண்டு செல்வதற்கான கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்காக தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதைப் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர், சேவைத்துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இப்பணி நடைபெறும் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளையும் அகற்றி பணிகளை மேற்கொண்டு விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-130க்குட்பட்ட வடபழனி நெற்குன்றம் பாதையில் குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கப்படுள்ள குப்பைகள் அகற்றும் பணி மற்றும் தூய்மைப் பணி தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்றிடுமாறும், பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுப்புறப் பகுதிகளையும் தூய்மையாகப் பராமரித்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com